]]>

Breaking News

சில வார்த்தைகள் | ஆதிரை

உதிர்த்திடா
சில வார்த்தைகள்
மௌனங்களைப் பற்றிக்
கொண்டிருக்கின்றன...
 
செல்லா காசுகளாகியும்
சில வார்த்தைகள்
சேமிப்பில் காத்துக்
கொண்டிருக்கின்றன...

உணவு துணுக்கென
சில வார்த்தைகள்
பற்களினிடையில் சிக்கிக்
கொண்டிருக்கின்றன...

விழுங்க இயலா
சில வார்த்தைகள்
தொண்டையில் விக்கிக்
கொண்டிருக்கின்றன...

மெல்ல முடியாத
சில வார்த்தைகள்
உமிழ்நீரில் நமத்துக்
கொண்டிருக்கின்றன ...

ஜாடையில் அரும்பிய
சில வார்த்தைகள்
கண்ணீரில் தத்தளித்துக்
கொண்டிருக்கின்றன ...

இதயத்தில் உயிர்த்த
சில வார்த்தைகள்
உள்ளுக்குள் துடித்துக்
கொண்டிருக்கின்றன ...

உயிர்க் கிழித்திடும்
சில வார்த்தைகள்
உதிரத்தை சிந்திக்
கொண்டிருக்கின்றன...

நெருங்கிட தவித்த
சில வார்த்தைகள்
மொழியின்றி விழித்து 
கொண்டிருக்கின்றன ...

பேசாது பழக்கப்பட்ட
சில வார்த்தைகள்
காயத்தை சுமந்து
கொண்டிருக்கின்றன ...

சொல்லாத
சில வார்த்தைகள்
செல்லரிக்காமல் வாழ்ந்து
கொண்டிருக்கின்றன...!

... ஆதிரை....




கருத்துகள் இல்லை